எரிபொருள், எரிவாயு விலை அதிகரிப்புக்கு திஸ்ஸ அத்தநாயக்க கண்டனம்
மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை நியாயமற்றதாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றைய தினம் (4) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு
“அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணங்களின் போது இலங்கைக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவை மக்களை சென்றடைவதைக் காணக்கூடியதாக இல்லை.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் அண்மைய அறிக்கையில் இலங்கையின் மிக மோசமான நிலைமை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதற்கான நிபந்தனைகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஸ்திரமான நிலைப்பாடு அறிவிக்கப்படவில்லை. அரசாங்கம் மக்களின் உண்மையான பிரச்சினைகளை இன்னும் இனங்காணவில்லை.
ஏற்கனவே இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கவும் இல்லை. அதற்கான வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை.
இந்த ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக புதிய அரசியல் கூட்டணியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாடாளுமன்றத்திலுள்ள கட்சிகளிடமும் , நாடாளுமன்றத்துக்கு வெளியிலுள்ள கட்சிகளிடமும் இது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்” என்றார்.