24 மணிநேரத்திற்கே எரிபொருள் கையிருப்பு : உயிருக்கு போராடும் காசா நோயாளிகள்
தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு 24 மணி நேரத்திற்கு மட்டுமே போதுமானதாக இருப்பதால் காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உயிருக்கும் சாவுக்கும் இடையிலான போரை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் நேற்று (16) அறிவித்தது.
கடந்த 7ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய எதிர்பாராத தாக்குதலைத் தொடர்ந்து, காசா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தொடங்கியதையடுத்து, மருத்துவமனைகளுக்கு எரிபொருள், மின்சாரம், தண்ணீர் வழங்குவதை நிறுத்தும் நடவடிக்கையால் மருத்துவமனைகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான நோயாளிகள் அவதியுறும் அவலம்
காஸா பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் எரிபொருள் இருப்பு தீர்ந்தால், மருத்துவமனைகளில் உள்ள ஜெனரேட்டர்களை இயக்க முடியாமல் ஆயிரக்கணக்கான நோயாளிகள் அத்தியாவசிய மருத்துவ வசதிகளை இழக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மனிதாபிமான பிரச்சினைகளை மேலும் மோசமாகும்
பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை உயிருடன் வைத்திருப்பது சவாலாக இருக்கும்.
காஸா பகுதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், அது தற்போது நிலவும் மனிதாபிமான பிரச்சினைகளை மேலும் மோசமாக்கும் எனவும் ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது.