தவறான அறிவுறுத்தலின் பேரில் வர்த்தமானி வெளியீடு - ஒத்துக்கொண்டது விவசாய அமைச்சு
இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதற்கான தடை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தவறான அறிவுறுத்தலின் பேரில் வெளியிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே.ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும்போக நெற்செய்கை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள விவசாயிகள், தமக்கான உரத்தை வழங்க கோரி, நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் அவரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
அரசாங்கம், அரச தலைவர் மற்றும் துறைக்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோர் உரத் தடைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்ட விடயத்தில் தவறிழைக்கவில்லை என விவசாயி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே.ஜயசிங்க கூறியுள்ளார்.
கொழும்பை தளமாகக் கொண்ட முன்னணி சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது, இரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை தடைசெய்யும் வர்த்தமானி அறிவித்தலுக்கு பதிலாக உயர்தரமிக்க சூழலுக்கு இசைவான உரத்தின் இறக்குமதியை அனுமதிக்கும் வகையிலேயே வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.