சாதாரண தர பரீட்சையில் முறைகேடு! ஆங்கில ஆசிரியரின் தொலைபேசி காவல்துறையினரால் பறிமுதல்
தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் ஆங்கில வினாத்தாளை பரப்பியது தொடர்பாக ஹசலக்க ஆங்கில தனியார் கல்வி நிலையத்தின் ஆசிரியர் மற்றும் அவரது தாயாரின் கையடக்க தொலைபேசிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் (சா/த) பரீட்சையின் போது கண்டுபிடிக்கப்பட்ட பல முறைகேடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள கொட்டாஞ்சேனை மற்றும் ஹசலக்க ஆகிய இரண்டு பரீட்சை நிலையங்களிலேயே இந்த முறைகேட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தொலைபேசிகள் பறிமுதல்
சில பரீட்சார்த்திகள் ஆங்கில வினாத்தாளுக்கான விடைகளை கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தி அணுக முயற்சித்ததாகவும், அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதனைத் தொடர்ந்து இந்த மையங்களில் இருந்த கண்காணிப்பாளர்கள் கையடக்க தொலைபேசிகளை பறிமுதல் செய்து, குறித்த பரீட்சை நிலையங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் உள்ள காவல் நிலையங்களில் முறைப்பாடு செய்ததாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
வாக்கு மூலம் பதிவு
இந்நிலையில், ஆங்கில வினாத்தாளை பரப்பியது தொடர்பாக ஹசலக்க ஆங்கில தனியார் கல்வி நிலையத்தின் ஆசிரியர் மற்றும் அவரது தாயாரின் கையடக்க தொலைபேசிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன்பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக ஆங்கில கல்வி நிலையத்தின் ஆசிரியர் மற்றும் அவரது தாயாரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |