சாதாரண தர பரீட்சை : தேசிய மட்டத்தில் சாதனை படைத்த கிழக்கு மாகாணம்
2023ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வரலாற்றில் முதல் முறையாக கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2ம் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
தேசிய மட்டத்தில் 6ஆம் இடத்தில் இருந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியமை வரலாற்று சாதனை என்பதோடு இதற்கு மாணவர்களின் கடின உழைப்பும் கிழக்கு மாகாணத்தின் புதிய சிறந்த கல்விக் கொள்கையுமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 58 மாணவர்கள் 9 பாடங்களிலும் விசேட சித்திகளைப் பெற்றுள்ளனர்.
சிறந்த பெறுபேறு
இந்த மாவட்டத்தில் அதிகமான 9 விசேட சித்தி பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கொண்ட பாடசாலையாக மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை பாராட்டைப் பெற்றுள்ளது.
அத்துடன் இந்தப் பாடசாலையில் 25 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்தி பெற்றுள்ளதோடு 13 மாணவர்கள் 7 பாடங்களில் விசேட சித்திகளையும் பெற்றுள்ளனர்.
கௌரவிப்பு நிகழ்வு
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், வின்சென்ட் மகளிர் கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்த மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் உதயகுமார் தவத்திருமகளின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கௌரவிப்பு நிகழ்வில் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கென்னடி, மட்டக்களப்பு கல்வி வலய நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் சாமினி ரவிராஜ், கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான நிதர்ஷனி மகேந்திரகுமார், மற்றும் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |