புடினின் தொடர் அச்சுறுத்தல்: களத்தில் இறங்கிய மற்றுமொரு நாடு
ரஷ்ய (Russia) ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) அச்சுறுத்தலை தொடர்ந்து ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியைப் பாதுகாப்பதற்கு ஜேர்மனி (Germany) தனது துருப்புக்களை களமிறக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜேர்மனி முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் தனது துருப்புக்களை களமிறக்கியுள்ளது.
அதன்படி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள லிதுவேனியாவில் 5,000 பேர் கொண்ட கவசப் படையணியை களமிறக்குவதாக ஜேர்மனி அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் நடவடிக்கை
நாஜிக்களால் ஐரோப்பாவில் மூண்ட போருக்குப் பிறகு, இராணுவ நடவடிக்கைகளை ஜேர்மனி தொடர்ந்து நிராகரித்தே வந்துள்ளது.
எனினும், கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவின் வம்பிழுக்கும் நடவடிக்கைகள், அமைதிவாதத்தை கைவிடும் நிலைக்கு ஜேர்மனியை தள்ளியுள்ளது.
புடினுக்கு எதிராக ஐரோப்பாவின் கிழக்குப் பகுதியைப் பாதுகாப்பதில் ஜேர்மனி தனது நேட்டோ நட்பு நாடுகளுடன் சேர முடிவு செய்துள்ளது.
அத்துடன், புதிய அணி ஒன்றை உருவாக்கி, 45ஆவது கவசப் படையணியை லிதுவேனியாவின் தலைநகரான வில்னியஸுக்கு வெளியே நடந்த விழாவில் முறையாக செயல்படுத்தியுள்ளனர்.
நட்பு நாடுகளின் பாதுகாப்பு
அதேநேரம், பிரிகேடியர் ஜெனரல் கிறிஸ்டோஃப் ஹூபரின் தலைமையில் ஒரு தற்காலிக தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரிகேடியர் ஜெனரல் கிறிஸ்டோஃப் ஹூபர் தெரிவிக்கையில், “எங்களுக்கு ஒரு தெளிவான நோக்கம் உள்ளது. நேட்டோவின் கிழக்குப் பகுதியில் உள்ள எங்கள் லிதுவேனிய நட்பு நாடுகளின் பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது” என அவர் தெரிவித்துள்ளார்.
லிதுவேனியா ரஷ்யாவுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளவில்லை என்றாலும், ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸ் உடன் சுமார் 700 கி.மீ நிலப்பரப்பை பகிர்ந்துகொண்டுள்ளது.
இதேவேளை, ரஷ்யாவின் நோக்கம் உக்ரைனில் நின்று விடும் என தான் நம்பவில்லை என்று ஜேர்மனியின் உயர்மட்ட தளபதிகளில் ஒருவர் ஜெனரல் கார்ஸ்டன் ப்ரூயர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

