புடினுக்கு நெருக்கமான செல்வந்தரின் ஆடம்பர கப்பலை கைப்பற்றியது ஜேர்மனி
ரஷ்ய செல்வந்தருக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ஆடம்பர கப்பலை ஜேர்மன் அதிகாரிகள் சிறைப்பிடித்துள்ளார்கள்.
ரஷ்யாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான Alisher Usmanov என்பவருடைய கப்பலே அதுவாகும்.
ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுப்பை மேற்கொண்டதை அடுத்து மேற்கத்தைய நாடுகளால் தடைகள் விதிக்கப்பட்ட ரஷ்ய செல்வந்தர்களில் Usmanovம் ஒருவர்.
புடினுக்கு நெருக்கமான மிகப்பெரிய செல்வந்தர்கள் மீது மேற்கத்தைய நாடுகள் விதித்துள்ள தடையின் பெருமளவிலான தாக்கத்தை பிரதிபலிப்பதாக இந்த சிறைப்பிடித்தல் உள்ளது.
Dilbar என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஆடம்பரப்படகில் இரண்டு ஹெலிகொப்டர்கள் இறங்கும் தளமும், 82 அடி நீள நீச்சல் குளம் ஒன்றும் உள்ளன. படகு ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நீச்சல் குளம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆடம்பரப் படகின் மதிப்பு, 600 முதல் 735 மில்லியன் டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
