ஜெர்மனியில் நிலத்தடி ஆயுதப் புதையல் கண்டுபிடிப்பு: ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்பென சந்தேகம்
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு வெளியே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் இரகசியமாகப் புதைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கிகள் (Handguns) மற்றும் வெடிமருந்துகள் அடங்கிய ஆயுதப் புதையலை ஜெர்மன் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் ரஷ்ய உளவு அமைப்புகளின் கொலைச் திட்டங்கள் அல்லது சதி வேலைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பில் ரோமானியாவில் உள்ள உளவு அதிகாரி ஒருவரை தங்கள் நாட்டிற்குக் கொண்டுவந்து விசாரிக்க ஜெர்மன் அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடுமையான வன்முறை
இந்த விடயம் குறித்து ஜெர்மன் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் டோப்ரிண்ட் (Alexander Dobrindt) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் கடுமையான வன்முறைச் செயலைச் செய்யத் திட்டமிட்ட சந்தேகத்தின் பேரில் கூட்டாட்சி அரசு வழக்கறிஞர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பு ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை இது காட்டுகிறது." என தெரிவித்துள்ளார்.
உளவுத்துறை தகவலின்படி இந்த ஆயுதப் புதையல் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், காவல்துறையினர் அந்த ஆயுதங்களை உடனடியாக அகற்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மாறாக, அவற்றை பயன்படுத்த முடியாதவாறு செயலிழக்கச் செய்து, அந்த இடத்திற்கு ஆயுதங்களை எடுக்க யார் வருகிறார்கள் என்பதை மாதக்கணக்கில் மின்-கண்காணிப்பு (Electronic Surveillance) மூலம் கண்காணித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |