பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு : நாமலிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்
வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக, 2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகள் விவகாரம் தொடர்பில் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்தக் கடிதத்தில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி முன்வைத்த “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்தில், “திறன்மிக்க தொழிலாளர் வளம் – கண்ணியமான தொழில் வாழ்க்கை” என்ற அத்தியாயத்தின் கீழ், வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் கொள்கை ரீதியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிரியர் சேவையில் இணைப்பு
அதன்படி, ஆசிரியர் சேவையில் 20,000 பேருக்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் STEM பட்டதாரிகள் 3,000 பேருக்கும், Non-STEM பட்டதாரிகள் 9,000 பேருக்கும், வருமான வரி, சுங்கம், வெளிநாட்டு சேவை மற்றும் சுற்றுலாத்துறைகளில் 3,000 பேருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குவதாக குறித்த கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தததாக தெரிவித்துள்ளார்.
இந்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தும் வகையில், தற்போது வேலையின்றி உள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடுகளை எதிர்வரும் பாதீட்டில் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தை தெளிவான காலக்கெடுவுக்குள் நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |