முழு இலங்கையையும் தமிழகத்திற்கு வழங்குங்கள் : சபையில் அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்
யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கையையும் இந்தியாவின் தமிழகத்திற்கு வழங்குமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தான் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் வெற்றியைத் தந்துள்ளதாகவும் தமிழக முதலமைச்சர் விஜய்க்கும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றிய போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழம் மற்றும் தமிழகம் இரண்டும் வார்த்தைகளால், மொழிகளால், உணர்வுகளால் இணைந்தது மட்டுமல்ல இரத்தத்தால் இணைந்த இரண்டு பிரதேசங்கள்.
தமிழ்நாடு எங்களுடைய தமிழீழ தேசத்தை அங்கீகரிக்கிறது. தமிழக மண்ணில் கால் பதிக்கும் போதுதான், இன்னொரு அந்நிய நாட்டுக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வே எங்களுக்கு ஏற்படுவதில்லை.
முன்னர் நான் யாழ்ப்பாணத்தையும், மட்டக்களப்பையும் தமிழகத்திற்கு வழங்குமாறு கூறினேன். ஆனால் இப்போது, ஒட்டுமொத்த இலங்கையையுமே தமிழகத்திற்கு கொடுக்குமாறு கூறுகின்றேன்.
நான் அப்பாவி சிங்கள மக்களை எதிர்ப்பவன் அல்ல, சிங்கள மக்களோடு இணைந்து வாழ்வதையே விரும்புகின்றேன். ஆனால் 2009 மே 18 இல் தமிழினப் படுகொலையை நிகழ்த்திய சிங்கள இனவாத அடக்குமுறை அரசை மட்டும் எதிர்க்கின்றேன்.
ஆயிரக்கணக்கான இசைப்பிரியாக்கள் புதைக்கப்பட்ட, தமிழர்களின் வலிகள் நிறைந்த மண்ணில் இன்று பௌத்த விகாரைகள் கட்டப்பட்டு வருகின்றது.
காட்டிக்கொடுக்கும் அரசியலால் சிதைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் இனிமேலாவது நிம்மதியாக வாழ்வதற்குரிய அரசியலை செய்வதற்கு என்னை விடுங்கள்.” என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |