ஜெனிவா அமர்வை கையாளும் பிரதிநிதிகள் குழுவிற்கு ஜீ.எல்.பீரிஸ் தலைமையேற்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடருக்கான சிறிலங்கா பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குவார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு 2022 பெப்ரவரி 28ஆம் திகதி முதல் ஏப்ரல் 1ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கும் வெளிவிவகார அமைச்சர் அமர்வின் உயர்மட்டப் பிரிவில் உரையாற்றவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சிறிலங்கா தொடர்பான கருத்துப் பரிமாற்ற கலந்துரையாடலிலும் பேராசிரியர் பீரிஸ் கருத்து வெளியிடவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சிறிலங்கா தொடர்பான எழுத்துமூலமான புதுப்பிப்பை சபையில் முன்வைக்கவுள்ளார்.
இதனையடுத்து 2022 மார்ச் 3ஆம் திகதி சிறிலங்கா தொடர்பான விடயம் கருத்துப் பரிமாற்ற கலந்துரையாடலுக்கு விடப்படவுள்ளது.
இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் சந்திப்புக்களை நடத்த உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
சிறிலங்கா தொடர்பில் கடந்த வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்திருந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளுக்கு மாறாக, மனித உரிமைகள் பேரவை செயற்பட முடியாது எனவும், குறிப்பிட்ட நாட்டை இலக்கு வைத்து அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது எனவும் சிறிலங்கா அரசாங்கம் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.