மூச்சுத்திணறல் அபாயம் : கொழும்பில் 12,000 'கோலி சோடா' போத்தல்கள் பறிமுதல்
கோலி சோடா' (Goli Soda) என்று அழைக்கப்படும் பிரபலமான குளிர்பானத்தின் சுமார் 12,000 போத்தல்களை, கொழும்பு மாநகர சபை (CMC) பறிமுதல் செய்துள்ளது. இவற்றின் மூடிகளில் உள்ள சிறிய கோலிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற பொதியிடல் முறை காரணமாகவே, பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனைகளின் மூலம் இந்தப் போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கொழும்பு மாநகர முதல்வர் விராய் காலி பல்தசார் (Vraie Cally Balthazaar) தெரிவித்தார்.
மூச்சுத்திணறலை ஏற்படுத்திய சம்பவங்கள்
இத்தகைய போத்தல்களில் உள்ள சிறிய கோலிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் தொண்டையில் சிக்கிக்கொண்டு மூச்சுத்திணறலை ஏற்படுத்திய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக 109 குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய மூன்று வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
நீதிமன்றின் உத்தரவு
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் மொத்தம் 351,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், பறிமுதல் செய்யப்பட்ட போத்தல்களை அழிக்குமாறும் உத்தரவிட்டது.

பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணுவதற்காக மேற்கொண்ட முயற்சிகளுக்காக, கொழும்பு மாநகர சபையின் சுகாதாரத் துறைக்கும், பொது சுகாதார பரிசோதகர்களுக்கும் முதல்வர் பல்தசார் நன்றி தெரிவித்தார்.
இத்தகைய நடவடிக்கைகளின் வெற்றியை, பறிமுதல் செய்யப்பட்ட போத்தல்களின் எண்ணிக்கை அல்லது விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் கொண்டு மட்டும் அளவிடக்கூடாது என்றும், மாறாக இவை தடுக்கக்கூடிய விபத்துகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆபத்தான சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு நடவடிக்கை எடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியமானது அவை நிகழாமல் தடுப்பதும் ஆகும் என்று அவர் மேலும் கூறினார்.
விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த இரகசிய தகவல் : கட்டுநாயக்காவில் உள்ள வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |