உலகவாழ் கிறிஸ்தவ மக்களால் பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிப்பு
உலகவாழ் கிறிஸ்தவ மக்களால் இன்று பெரிய வெள்ளி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதன்படி, தமிழர் தாயகத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெற்றிருந்தன.
இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்து 40 நாட்களுக்கு தவக்காலத்தை கடைபிடிக்கும் கிறிஸ்தவ மக்கள், இன்று வெள்ளிக்கிழமை இயேசு கிறிஸ்து சிலுவையில் அறைப்பட்டு மரித்த தினத்தை பெரிய வெள்ளியாக அனுஷ்டிக்கின்றனர்.
இலங்கையிலுள்ள தேவாலங்களிலும் பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன.
இன்றிலிருந்து 03 நாட்களில் வரும் உயிர்த்தெழுதல் நாள் வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில் வவுனியா கோமரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள கல்வாரி திருத்தலத்தில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் திருப்பாடுகளை நினைவுகூரும் திருச்சிலுவைப்பாதை மக்களின் பங்குபற்றுதலில் இடம்பெற்றது.
இதில் அருட்பணியாளர்கள் மற்றும் அருட்சகோதரிகள், அப்பகுதி மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இதேவேளை நீர்கொழும்பு, பெரியமுல்லை இன ஐக்கிய அமைப்பினால் பாற்கஞ்சியை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
வருடந்தோறும் நடைபெறும் இந்த நிகழ்வு இன்று பிரார்த்தனைகள் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்றிருந்தது.
கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு ஆசி வேண்டியும், நாட்டு மக்களுக்கு விடுதலை வேண்டியும் இந்த நிகழ்வை நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
