உடனடியாகவே நிராகரித்தார் கோட்டாபய
ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோர் கோட்டாபயவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.
கடந்த மாதம் 23 மற்றும் 30 ஆகிய திகதிகளில் இடம்பெற்ற கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான செயலணியின் கூட்டங்களின் போது அவர்கள் இந்த கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்திருந்தனர்.
எனினும் அந்த கோரிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். அத்துடன் அரச தலைவரது இந்த தீர்மானத்தை கொவிட் 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான செயலணியின் தலைவரான இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா வரவேற்றுள்ளார்.
மேலும் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதன் ஊடாக நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படும் எனவும் அரச தலைவர் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அத்தியாவசியமற்ற செயற்பாடுகளுக்கு தடை விதிக்குமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே முன்வைத்த கோரிக்கையும் கோட்டாபய ராஜபக்சவினால் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் ஸ்ரீலங்கா தற்போது இந்தியாவின் நிலையை நெருங்கிக் கொண்டிருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக மேலும் தொற்று பரவாமல் தடுப்பதற்காக குறைந்தபட்சம் 7 நாட்களுக்காவது ஸ்ரீலங்கா முழுவதும் தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்செய்யும்படியும் அவர் கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்.