கொழும்பின் நிலையை மாற்றப்போகும் கோட்டாபயவின் முடிவு - போராட்டங்கள் வெடிக்கும் அபாயம்
மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும்
இலங்கைக்கு நாடு திரும்பியுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, அரசியலில் தலையீடுகளை மேற்கொண்டாலோ அல்லது பதவிகளை பெற்றுக் கொண்டாலோ மீண்டும் போராட்டங்கள் வெடிக்கும் என கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்கார்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்சவை பதவியிலிருந்து வெளியேறுமாறே தாம் கோரியதாகவும், மாறாக நாட்டை விட்டு வெளியேற வலியுறுத்தவில்லையெனவும் கொழும்பு காலி முகத்திடல் போராட்டக்காரரான ராஜீவ் காந்த் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.
கோட்டாபயவின் மீள் அரசியல் பிரவேசம்
இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரக்கூடாது என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் குடும்ப உறுப்பினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்திருக்கிறார்.
தாம் அரசியல் புலனாய்வு இல்லாதவர் ஆனால், சில நிர்வாக பதவிகளில் திறமையான அதிகாரி என்று கோட்டாபய ராஜபக்ச கூறுகிறார். ஆனால் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வந்தால் அது முட்டாள்தனம் என அவர் கூறியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச அரசியலில் ஈடுபட்டு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்காமல் சுதந்திரமாக வாழ்வதையே அவர் செய்ய வேண்டும் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடு திரும்பியுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மல்லசேகர மாவத்தையில் தரிப்பு
கோட்டாபய ராஜபக்ச நேற்றுமுன்தினம் (2) நள்ளிரவு நாடு திரும்பியதை அடுத்து மல்லசேகர மாவத்தையில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான இல்லத்தில் தற்போது பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பல முக்கிய பிரமுகர்கள் சென்று அவரை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, கோட்டாபய ராஜபக்சவுக்கு முன்னாள் அதிபருக்கான உரிமைகள் வழங்கப்படவுள்ளதாக அதிபரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மக்களின் கருத்து
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடப்போவதாகவே மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
அவ்வாறு அரசியலில் குதித்தால் மக்களை திரட்டிப் போராடினால் மாத்திரமே ராஜபக்சர்களது கொட்டத்தை அடக்க முடியும் என மக்கள் கூறுகின்றனர்.
இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி காரணமாக நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச, நேற்றுமுன்தினம் (2) நாடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில், அவர் தேசியப்பட்டில் ஊடாக நாடாளுமன்றம் சென்று பிரதமர் பதவியை பெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில், மக்களின் கருத்து இவ்வாறு இருக்கிறது.
