புலனாய்வு பிரிவின் எச்சரிக்கை -கோட்டாபய நாடு திரும்புவதில் சிக்கல்
புலனாய்வுப்பிரிவின் அறிவுறுத்தல்
தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதில் பாதுகாப்பு பிரச்சினை முக்கிய இடத்தை வகிப்பதால் அவர் நாடு திரும்புவதை தாமதப்படுத்துமாறு புலனாய்வுப்பிரிவு அறிவுறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து அவர் நாளைய தினம் நாடு திரும்பமாட்டார் என அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு வாரங்கள் தாமதமாகும் பயணம்
இந்த நிலையில் அவர் இலங்கை திரும்புவதற்கான பயணம் இரண்டு வாரங்கள் தாமதமாகும் எனவும் பெரும்பாலும் செப்ரெம்பர் மாதத்தில் அவர் நாடு திரும்புவார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர் நாடு திரும்புவதற்கான பாதுகாப்பு மற்றும் பிற விடயங்கள் தற்போது கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நிறைவு பெற்றதும் இரண்டு வாரங்களில் அல்லது அதற்கு முன்னரேயே அவர் நாடு திரும்புவார் எனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
வெடித்த மக்கள் புரட்சி
கடந்த ஜூலை 9 ஆம் திகதி இலங்கையில் வெடித்த மக்கள் புரட்சியை அடுத்து இலங்கையில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு வழியாக சிங்கப்பூரை சென்றடைந்தார். அங்கிருந்து அவர் கடந்த 11 ஆம் திகதி தாய்லாந்து சென்றிருந்தார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இராஜதந்திர கடவுச்சீட்டைக் கொண்டுள்ளதால், 90 நாட்கள் வரை தாய்லாந்தில் அவருக்கு தங்கியிருக்க முடியுமென தாய்லாந்து பிரதமர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
தாய்லாந்து விடுதி ஒன்றில் தங்கியிருந்த கோட்டாபயவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவரை விடுதியை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து காவல்துறையினர் அவருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
