முடிவில்லாமல் தொடரும் கோட்டாபயவின் இலங்கை வருகை! ரணிலுக்கு சென்ற கடிதம்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் இலங்கைக்கு திரும்புவதற்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பி மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தல் நிலைமையை மதிப்பிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வேண்டும், முன்னாள் அதிபர் ஒருவர் அத்தகைய கோரிக்கையை முன்வைக்கும் போதெல்லாம் அவருக்கு சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை வழங்குமாறு சிபாரிசு செய்வதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்கள் புரட்சிக்கு மத்தியில் நாட்டில் இருந்து வெளியேறிய கோட்டாபய
கடந்த ஜூலை 9 ஆம் திகதி வெடித்த மக்கள் புரட்சியை தொடர்ந்து இலங்கையில் இருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்ச மாலைதீவு வழியாக சிங்கப்பூரை சென்றடைந்தார்.
இதேவேளை, அவர் கடந்த 11 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றிருந்தார்.
முன்னாள் அதிபரான கோட்டாபய ராஜபக்ச இராஜதந்திர கடவுச்சீட்டைக் கொண்டுள்ளதால், 90 நாட்கள் வரை தாய்லாந்தில் அவருக்கு தங்கியிருக்க முடியுமென தாய்லாந்து பிரதமர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
தாய்லாந்து விடுதி ஒன்றில் தங்கியிருந்த கோட்டாபயவின் பாதுகாப்பு நிலவரத்தை கருத்தில் கொண்டு, அவரை விடுதியை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து காவல்துறையினர் அவருக்கு அறிவுறுத்தியிருந்தனர்.
நாடு திரும்பும் கோட்டாபய
இந்நிலையில், தாய்லாந்து சென்ற கோட்டாபய இம்மாதம் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் கோட்டாபய ராஜபக்ச தற்போது நாடு திரும்புவது சரியான நேரமில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.
அத்துடன், தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியுள்ள கோட்டாபய, எதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்புவார் என்று ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், தாய்லாந்தில் உள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் இலங்கை வருகை அடுத்த மாதம் (செப்டெம்பர்) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பின்னரே, வருகை பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டாரவும் தெரிவித்திருந்தார்.
உறுதியாகாத முடிவு
இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்புவார் என்பது உறுதியாகிய நிலையில் அவர் வரும் திகதி இன்னமும் உறுதியாக தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்சவின் குடும்பம் நாடு திரும்புவதற்கு அரசாங்கம் தகுந்த பாதுகாப்பை வழங்குமாறு மனித உரிமை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.