கொத்தலாவல பல்கலைக்கழகம் தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளியிட்ட கோட்டாபய!
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சட்டத்தில் உள்ள தடைகளை அகற்றி, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை அதன் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொவிட் – 19 ஒழிப்புக்குத் தடுப்பூசி ஏற்றுதல் உள்ளிட்ட அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டம் தொடர்பில், பௌத்த மஹா சங்கத்தினருக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று தெளிவுபடுத்தினார். இதன்போதே மேற்கண்டவாறு கூறினார்.
கடந்த 8 ஆம் திகதி ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் தொடர்பான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கம் நேரம் நாடாளுமன்றம் அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் நோக்கில் பொலிஸார் அடிதடியில் ஈடுபட்டிருந்தனர். பெண்களைத் தாக்கி ஆடைகளை் கிழிக்கப்பட்டன. பௌத்த துறவிகளும் வலுக்கட்டாயமாக தரையில் அழுத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் உட்பட 16 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். நீதிமன்றம் பிணை வழ்கிய நிலையில் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி அவர்கள் பொலிஸாரால் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு சமூக அமைப்பினரால் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆசிரியர்கள் இணைய வழிமூலமான கற்கைகளையும் இடைநிறுத்தியிருந்தனர்.
இதன் காரணமாக நேற்று மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே கோட்டாபய இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.