கோட்டாபய-மஹிந்த அரசாங்கத்தின் தற்போதைய பயணம் மாற்றமடையாமல் தொடர்ந்தால் மக்களின் சாபமே அழித்துவிடும்!
ஸ்ரீலங்காவின் கோட்டாபய-மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தின் தற்போதைய பயணம் மாற்றமடையாமல் தொடர்ந்தால் நாட்டு மக்களின் சாபமே அரசாங்கத்தை அழித்துவிடும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தனியொரு நபரிடம் அதிகாரங்கள் குவிந்துள்ளமையே இலங்கையில் தற்போதைய பிரச்சினைக்கு காரணம் எனவும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நாட்டின் அதிகாரம் தனியொரு நபரிடம் குவிந்துள்ளமையே தற்போதைய பிரச்சினைகளுக்கான காரணமாகும்.
அவரது உத்தரவுகளை பெறமுடியாமல் இன்று பல அரச நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்கமுடியாமலிருக்கின்றன.
அதனால் நாட்டின் ஜனநாயகமும் பாதிக்கப்படுவதோடு அரச பொறிமுறையும் செயலிழந்து வருகிறது.
இதற்கு மூலகாரணம் 20ஆவது திருத்தமாகும். அரச பொறிமுறை சரிவர செயற்படுத்தப்பட வேண்டும் என்றால் தனியொரு நபரிடம் உள்ள அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
அதற்காகவே நாங்கள் போராடுகின்றோம். 20ஆவது திருத்தத்தின் ஊடாக நாட்டிற்கோ நாட்டு மக்களுக்கோ நீதியைப் பெற்றுக்கொடுக்கவும் முடியாது.
அதனையே கெட்டம்பே விகாரையின் தலைமைத் தேரரும் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் அமைச்சர்கள் சிலர் அவரை சந்திக்கச் சென்றிருந்தபோது அவர் நேரடியாக நிலைமையை தெளிவுபடுத்தியிருக்கின்றார்.
மகாநாயக்க தேரர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களுடைய கருத்துமே இந்த 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கச் செய்வதே ஆகும்.
20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவினத்தை கட்டுப்படுத்த முடிந்ததா? ஜனநாயகம், பொருளாதாரத்தைப் பலப்படுத்தமுடிந்ததா? இல்லை. மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் கோரியது. மக்கள் அதனைத் தந்தார்கள்.
இன்று 20ஆவது திருத்தத்தையும் கொகண்டு வந்தார்கள். தற்போது எதிரணி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறித்து அதற்குக் குழு அமைத்து அவசர அவசரமாக வழக்குகளையும் தாக்கல் செய்ய அரச தரப்பு முயற்சித்து வருகின்றது.
இதற்கு மக்கள் எப்போதும் இடமளிக்க மாட்டார்கள். இந்த நிலைமை தொடர்ந்தும் சென்றால் மக்களின் சாபமே அரசாங்கம் மீது விழும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.