ஜெய்சங்கரின் இலங்கை பயணம் : உறுதிப்படுத்திய இந்திய அரசாங்கம்
இந்திய (India) வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் (S. Jaishankar) இன்றைய தினம் (04) இலங்கைக்கு (Sri Lanka) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சு (Ministry of External Affairs) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anurakumara Dissanayake) மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய (Harini Amarasuriya) ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, ஜெய்சங்கர் மற்றும் அவரது குழுவினர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை (Vijitha Herath) சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர்
அமைச்சர் ஜெய்சங்கருடன் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் வரவுள்ள நிலையில் புதிய ஜனாதிபதி கடந்த வாரம் பதவியேற்றதன் பின்னர், நாடு ஒன்றின் வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறையாகும்.
புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது உயர்மட்ட பேச்சுவார்த்தையும் இதுவாக அமையவுள்ளது.
மேலும், ஒக்டோபர் இரண்டாம் திகதி உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை மீண்டும் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியமை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |