மகிந்த கூட நடவடிக்கை எடுக்கவில்லை -அரசின் பங்காளி கட்சிக்கு ஏற்பட்ட கவலை
அரசின் பங்காளி கட்சிகளில் ஒன்று மே 22 ஆம் திகதி குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமை தொடர்பில் கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
லங்கா சமசமாஜ கட்சி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
நாட்டின் குடியரசு தினம் மே 22ஆ ம் திகதியாகும். 1972 குடியரசு தினத்துக்கு பின்னரே நாட்டுக்கு பூரண சுதந்திரம் கிடைத்தது. 1948 ஆம் ஆண்டு சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டாலும் அப்போது பூரண சுதந்திரம் கிடைத்திருக்கவில்லை. 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பு அங்கிகரிக்கப்படும்வரை, எமது நாட்டின் அரச தலைவர் பிரித்தானிய அரச தலைவராகும். பிரித்தானிய இராணுவ தளபதியே எமது நாட்டின் இராணுவ தளபதியாகும்.
அதேபோன்று நீதிமன்ற தீர்ப்பின் இறுதி முடிவு பிரித்தானிய நீதிமன்றமே மேற்கொள்ளும். ஆனால் 1972ஆம் ஆண்டு குடியரசு தினத்துக்கு பின்னரே அரச தலைவர், இராணுவ தளபதி, நீதிமன்ற சுதந்திரம் என இவை அனைத்தும் எமக்கு கிடைக்கப்பெற்றன. இதற்கான அரசியலமைப்பை எமது கட்சியைச் சேர்ந்த கொல்வின் ஆர்.டி, சில்வாவே சமர்ப்பித்தார்.
ஆனால் இந்த தினத்தை கொண்டாடுவதற்கு எந்த அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருந்தபோது இதுதொடர்பாக நான் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து, நாட்டின் குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேணடும் என தெரிவித்திருந்தேன்.
என்றாலும் அது நடைமுறைக்கு வரவில்லை.
மேலும் எமது அயல் நாடான இந்தியாவில் அந்த நாட்டின் குடியரசு தினத்தை அவர்கள் எந்த வருடமும் சுதந்திர தினத்தைப்போன்று கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் எமது குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கவலையளிக்கின்றது. எதிர்வரும் வருடங்களிலாவது குடியரசு தினத்தை கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.