பொருட்களுக்கான விசேட பண்ட வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானம்
வெங்காய விலைக்கு நிவாரணம் வழங்கும் வகையில், பொருட்களுக்கான விசேட பண்ட வரியை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அண்மையில் கூடிய தேசிய உணவுக் கொள்கைக் குழு இது தொடர்பான பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயத்தின் ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு விசேட பண்ட வரியை 10 ரூபாயிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்க கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
வெங்காய இறக்குமதி
இதன் விளைவாக, வெங்காயத்தின் இறக்குமதி வெகுவாகக் குறைந்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 27 ஆயிரத்து 889 மெட்ரிக் தொன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் இந்த அளவானது 13,496 ஆயிரம் மென்ரிக் தொன்னாக குறைவடைந்துள்ளது.
இதன்படி, கடந்த ஓகஸ்ட் மாதம் 175 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் விலை தற்போது 328 ரூபாவாக அதிகரித்துள்ளது.
சிறப்பு பண்ட வரி
இந்த திடீர் விலை உயர்வுக்கு செப்டம்பர் மாதம் உயர்த்தப்பட்ட சிறப்பு பண்ட வரியே காரணம் என்றும், அதனால் வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது.
இதன்மூலம் வெங்காயத்திற்கான செலவீனத்தை குறைக்க முடியும் என அதிபரின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது