அரச ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் தொடர்பில் நடவடிக்கை
இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்ட சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவை நிறுவும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த விடயத்தை அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
பல அரச ஊழியர் தொழிற்சங்கங்களுடன் நேற்று (13.01.2026) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் குறிப்பிட்டார்.
ஓய்வூதியக் கொள்கை
சம்பளம் மற்றும் ஓய்வூதியக் கொள்கைகளை நிலையான முறையில் நிர்வகிப்பது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பள முரண்பாடுகள் மற்றும் அரச நிதி நிர்வாகத்தில் ஏற்படும் சவால்களைக் கருத்திற் கொண்டு, அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்காக இந்தச் சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டது.
ஏனைய தொழிற்சங்கங்களின் கருத்துக்களுக்கும் இத்தகைய கலந்துரையாடல் வாய்ப்புகள் திறக்கப்படும் என அமைச்சர் இந்தச் சந்திப்பின் போது வலியுறுத்தினார்.
ஜனாதிபதியினால் முன்மொழிவு
இதன் அவசரத் தேவையைக் கருத்திற் கொண்டே 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஜனாதிபதியினால் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதும், இந்த ஆணைக்குழுவை நிறுவும் பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, ஆணைக்குழு நிறுவப்பட்டதன் பின்னர் அனைத்து அரச ஊழியர்களும், அனைத்து தொழிற்சங்கங்களும் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ தமது விடயங்களை முன்வைக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |