இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கப்படவேண்டிய சேவைகள்...அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
இலங்கை சுங்கம் உள்ளிட்ட எல்லை முகவர்களால் வழங்கப்படும் சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, ஏற்றுமதியை எளிதாக்கவும், வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும், காகிதமில்லா வர்த்தகத்தை உறுதி செய்வதற்காகவும், இலங்கை சுங்கம் உள்ளிட்ட எல்லை முகவர்களால் வழங்கப்படும் சேவைகளை அரசாங்கம் முழுமையாக டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என உலகளாவிய ஏற்றுமதியாளர்கள் மன்றத்தின் (Global Shippers Forum) தலைவர் சீன் வான் டார்ட் (Sean Van Dort) தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார், இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
உலகப் பொருளாதாரம்
"கொரோனாத் தொற்றுநோய் காலத்தில் இலங்கை சுங்கம் சீராக இயங்கி, முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சேவைகளை வழங்கியது, கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னான காலத்தில், நிறுவனம் கைமுறை செயன்முறைக்குத் திரும்பியது, இந்த செயன்முறையானது தாமதங்கள் மற்றும் கூடுதல் செலவுகளுடன் ஊழலுக்கும் வழிவகுத்துள்ளது.
தொடர்ந்து வந்த அரசாங்கங்களுக்கும் டிஜிட்டல் மயமாக்கலுக்குச் செல்வதற்கான உந்துதல் மற்றும் தொலைநோக்குப் பார்வை இருக்கவில்லை, அதுமாத்திரமன்றி துறைமுகப் போக்குவரத்துச் செலவில் ஏற்படும் ஒவ்வொரு ரூபாயும் உங்களிடம் திரும்ப வந்து சேருகிறது, இது வாடிக்கையாளருக்கு அனுப்பப்படுகிறது.
இன்றைய உலகப் பொருளாதாரத்தில் இது ஒரு முக்கியமான அம்சம் எனவே இதனை புறக்கணிக்காது, இலங்கை சுங்கம் உள்ளிட்ட எல்லை முகவர்களால் வழங்கப்படும் சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்." என்றார்.
டிஜிட்டல் சேவை
பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் முழுமையான டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்கு நகர்வதால், இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதியில் தமது சந்தைப் பங்கை இழக்க நேரிடும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
“இந்தியாவிலும் பங்களாதேஷிலும் ஒரு முன்னுதாரண மாற்றம் ஏற்பட்டுள்ளது, இந்த மாற்றத்தின் வாயிலாக அவர்கள் எங்கள் சந்தைப் பங்கையும் பிடிக்கிறார்கள், ”என்று அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |