பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்: வெளியான அறிவிப்பு
தேயிலைத் தொழிலாளர்களுக்காகப் புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தை விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதிச் சபை மற்றும் பெருந்தோட்ட மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு அமைச்சு இணைந்து அறிமுகப்படுத்தவுள்ளன.
இந்தத் திட்டத்திற்குள் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் நபர்கள் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்களிப்புத் தொகைகள்
இதில் ஒவ்வொரு தொழிலாளியின் நிதித் திறனுக்கு ஏற்பப் பங்களிப்புத் தொகைகள் சரிசெய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 18 வயதில் இணையும் ஒருவர் காலாண்டுக்கு (மூன்று மாதங்களுக்கு ஒருமுறை) 600 ரூபாயைப் பங்களிப்பாக வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் 60 வயதை எட்டும்போது 5,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறத் தகுதி பெறுவார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பங்களிப்புத் தொகையைப் பொறுத்து மாதந்தோறும் 15,000 ரூபாய், 20,000 ரூபாய், 25,000 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வூதியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆயுள் காப்புறுதி
அத்துடன் பங்கேற்பாளர்கள் எந்நேரத்திலும் தங்களது சலுகைகளை அதிகரித்துக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மையும் இதில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் ஆயுள் காப்புறுதி வசதியும் உள்ளடங்கியுள்ளதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

பங்களிப்பாளர் ஒருவர் திடீர் விபத்துக்குள்ளாகி முழுமையான அல்லது பகுதியளவு ஊனமுற்றால் அல்லது ஓய்வுபெறுவதற்கு முன்னரே மரணமடைந்தால் அதற்கான இழப்பீடு வழங்கப்படும்.
ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருக்கும் காலத்தில் மரணம் நேரிட்டால் அவரது மனைவி அல்லது கணவர் அந்தப் பலன்களைத் தொடர்ந்து பெறுவார்.
வேலை செய்வதற்கு முடியாத காலத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதும் அவர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதுமே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் என அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |