நகைச்சுவையாக மாறியுள்ள அரசின் கொள்கைகள் - ஆளும்தரப்பு எம்.பி கடும் விமர்சனம்
70-77 பருவ காலத்திற்கு நாடு திரும்பியதை இட்டு சிலர் பெருமைப்படுகிறார்கள் என்றாலும், அவ்வாறு பெருமைப்படுவதற்குரிய சூழ்நிலை தற்போது அல்ல என்று பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
அந்த நேரத்தில் நாடு கடனில்லாத நிலையில் இருந்தது என்பதை சுட்டிக்காட்டிய எம்.பி, தற்போது டிரில்லியன்களில் சர்வதேச சமூகத்திற்கு கடன்பட்ட ஒரு நாட்டிற்கு 70-77 இன் கொள்கைகள் எந்த வகையிலும் பொருந்தாது என்று கூறினார்.
எல்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கம் எடுக்கும் சில முடிவுகள் மற்றும் கொள்கைகள் முழு நாட்டிற்கும் ஒரு நகைச்சுவையாக மாறிவிட்டன, மேலும் அவை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு ஒரு நல்ல கடியாக மாறிவிட்டன. இதுபோன்ற கொள்கைகள் காரணமாக, அரசாங்கம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடும் இறுதியில் நகைச்சுவையாக மாறும் என்று அவர் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் நியமிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து தெரிவித்த அவர், மத்திய வங்கி மற்ற அரச நிறுவனங்களைப் போல அரசியலாக்கப்படக் கூடாது என்று கூறினார். மத்திய வங்கி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும், அரசியல்வாதிகளின் விருப்பங்களை பூர்த்தி செய்ய அல்ல எனவும் குறிப்பிட்டார்.
அஜித் நிவார்ட் கப்ரால் முதன் முதலாக மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை உறுப்பினராக இருந்தார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.