இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்
இந்திய மீனவர்கள் வேண்டுமென்றே சில சந்தர்ப்பங்களில் சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறுவதாக அரசாங்கத்தின் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஸ் பத்திரண குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் இந்துலங்கா மீனவப் பிரச்சினை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்தபோதே அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்திய மீனவர்கள் சிறிலங்கா கடற்பரப்பில் அத்துமீறும் விடயத்திற்குத் தீர்வுகாண அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் மிகவும் இராஜதந்திர மட்டத்தில் முயற்சிகளை செய்துவருவதோடு மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
துரதிஷ்டவசமாக இந்திய - சிறிலங்கா கடல் எல்லை என்பது வரையறுக்கப்பட்ட அல்லது நிர்ணயிக்கப்பட்ட மதில் எல்லையாக இல்லை. மாறாக உதாரணமாக கொள்ளப்படுகின்ற எல்லையாகவே இருந்துவருகின்றது.
சில சந்தர்ப்பத்தில் இந்திய மீனவர்கள் வேண்டுமென்றே அவர்கள் அத்துமீறல்களை செய்கின்றார்கள். இந்தச் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதோடு இராஜதந்திர மட்டத்தில் நட்புறவை பாதுகாப்புச் செய்து தீர்வுகாண்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது எனக் கூறியுள்ளார்.