அரசாங்கத்தின் அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும் - எதிரணி இடித்துரைப்பு
அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இனியும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை அழிக்க கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நெருக்கடிக்கு ஒன்றிரண்டு மாதங்களில் தீர்வை வழங்க முடியாது

கேகாலை மாவட்டத்தின் அறநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய சஜித் பிரேமதாச, நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ஒன்றிரண்டு மாதங்களில் தீர்வை வழங்க முடியும் என சிலர் கூறுவதாகவும், அது முற்றுமுழுதான பொய் எனவும் கூறியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மொட்டுக் கட்சியினர் மக்களை அச்சமடையச் செய்தனர் எனவும் இன்று நாட்டை அச்சமூட்டுவதற்கு மற்றுமொரு குழு உருவாக்கப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்களை பொய்யை கூறி, உண்மைக்கு புறம்பாகவும், தவறாகவும், மாயை ஊடாகவும் வெற்றிகொள்வதற்கு முயற்சிப்பதாகவும் அதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எப்போதும் ஒரே கொள்கையுடன் இருக்கிறோம்

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம், தமது கட்சி எப்போதும் ஒரே கொள்கையுடன் சரியான விடயத்திற்காகவே நிற்கின்றது எனக் கூறியுள்ளார்.