உணவளிக்கும் விவசாயிகளை அரசாங்கம் நெருப்பில் தூக்கிப் போடுகின்றது! எதிர்க்கட்சித் தலைவர் காட்டம்
விளை நிலங்களுக்கு சென்ற விவசாயிகள் இன்று நீதிமன்றத்தை நாடிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதோடு நாட்டுக்கே உணவளித்த விவசாய மக்களை இந்த அரசாங்கம் நெருப்பில் தூக்கி எறிந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
நாட்டில் பஞ்சம் ஏற்பட்டால் அதற்கு பதிலளிக்க வேண்டியது தன்னிச்சையாக செயற்படுகின்ற இந்த அரசாங்கமே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) எண்ணக்கருவில் அமைந்த விவசாய சமூகம் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பயிர்ச்செய்கை நிலத்துக்கு சென்று ஆராயும் "கொவிஹதகெஸ்ம" திட்டத்தின் இரண்டாவது கட்டமாக திஸ்ஸமஹாராம வெரலிஹலெ விவசாயிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
விவசாய மக்களை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த இன்றைய அரசாங்கம் அந்த விவசாய மக்களை மறந்து செயற்படுகின்றது.
மேலதிகமாக உற்பத்திகளை மேற்கொள்கின்ற விவசாயிகள் இன்று நிலமட்டத்திற்கே வீழ்ந்துள்ளர். இந்த அரசாங்கம் நாட்டை துரித கதியில் பஞ்சத்தின் பக்கம் இழுத்துச் செல்கின்றது.
எதிர்வரும் காலங்களில் உருவாகின்ற பஞ்சத்திற்கு முழுப் பொறுப்பும் இந்த அரசாங்கமேயன்றி வேறு யாரும் அல்ல எனவும் அதற்குக் காரணம் அரசாங்கத்தின் தன்னிச்சையான விவசாயக் கொள்கை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.