மனம்பேரியின் வெளிப்படுத்தலால் தாஜுதீன் விசாரணையில் திடீர் திருப்பம்!
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் ரகர் வீரர் வாசிம் தாஜுதீனின் மரணம் குறித்து புதிய விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை நேற்று(03) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டுள்ளார்.
ஐஸ என்ற போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ரசாயனக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் சம்பத் மனம்பேரி 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
மனம்பேரியின் வாக்குமூலம்
எனினும், மனம்பேரியின் விசாரணைக்கு பிறகு வெளியான பல்வேறு தகவல்களின் அடிப்படையில தாஜுதீனின் மரணம் குறித்த விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாடுவதற்காக விசாரணைகள் மீண்டும் தொடங்கப்பட்டன என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர், விசாரணைகள் இன்னும் நடந்து வருவதாகவும், கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு மட்டுமே அதற்கான தொடர்புகள் தெரியும் என கூறியுள்ளார்.
இதன்படி, விசாரணைகளுடன் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் சம்பத் மனம்பேரி இப்போதுதான் தகவல்களை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார் என்றும் அமைச்சர் நளிந்த மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
