வடக்கு மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் சில மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
அதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய நான்கு மாகாணங்களின் தேர்தலே இவ்வாறு நடத்தப்படவுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் மாகாணசபைத் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வருகின்றமை மற்றும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கை சமர்ப்பித்தல் தாமதப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திடம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி பொதுமன்னிப்பு கிடைத்தால் ஏனைய புதைகுழிகளை அடையாளம் காட்டுவேன்! CID-யிடம் சோமரத்ன ராஜபக்ச அறிக்கை
நாடாளுமன்ற விசேட செயற்குழு
மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழுவில் ஐந்து தடவைகள் முன்னிலையாகி தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட மற்றும் நிர்வாக அலகு சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.
எனினும் அந்த பரிந்துரைகள்,யோசனைகளுக்கு அமைய இதுவரையில் சாதகமான தீர்மானங்கள் அல்லது உரிய நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்ற விசேட செயற்குழு கடந்த செப்டெம்பர் மாதம் தமது விதப்புரை அறிக்கையை சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டது. இருப்பினும் குறித்த காலப்பகுதியில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
செயற்குழுவின் செயற்பாட்டு பதவிக்காலம் எதிர்வரும் மாதம் 17 ஆம் திகதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமாவது செயற்குழு அறிக்கை சமர்ப்பிக்குமா என்று தேர்தல்கள் ஆணைக்குழு கேள்வியெழுப்பியுள்ளது.
சட்ட சிக்கலுக்கு தீர்வு
இதற்கு பதிலளித்த அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர், மாகாணசபைத் தேர்தல் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டவுடன் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தலை 2027 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அளவில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபை தேர்தல் முறைமையில் காணப்படும் அடிப்படை சட்ட மற்றும் நிர்வாக அலகுசார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் நிர்வாக கட்டமைப்பில் குளறுபடிகளே தோற்றம் பெறும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |