இலங்கையில் நடந்த வலிந்து காணாமலாக்கப்படல்கள் : உண்மையை ஏற்குமாறு அரசுக்கு அழுத்தம்
இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெற்றன என்ற உண்மையை அரசும், அரசு சாராத சகல தரப்புக்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் தவிசாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் (Saliya Pieris) வலியுறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் (14) இடம்பெற்ற 'செம்மணி' நூல் வெளியீட்டு நிகழ்வும், அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற 'இலங்கையில் காணாமலாக்கப்பட்டோர் மற்றும் மனிதப்புதைகுழிகள்' எனும் தலைப்பிலான கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”2018 ஆம் ஆண்டு காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இரண்டு வருடகாலம் அதன் தவிசாளராகப் பணியாற்றினேன்.

ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல்
நீதியமைச்சின் கீழ் இயங்குகின்றது
அவ்வேளையில் அலுவலகத்துக்கு ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் நாம் சென்று பார்த்தபோது எமக்கான அலுவலகம் கூட இருக்கவில்லை.
எனவே எவ்வாறிருப்பினும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்துக்கு அவசியமான வளங்கள் மற்றும் வசதிகள் இல்லாமலும், தீர்வுகாணவேண்டும் என்ற உண்மையான அரசியல் தன்முனைப்பின்றியும் எதனையும் செய்யமுடியாது.
அதேபோன்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் நீதியமைச்சின் கீழ் இயங்குகின்றது. அவ்வாறிருக்கையில் அந்த அலுவலகத்தினால் சுதந்திரமாகச் செயற்படமுடியாது. காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் உரியவாறு இயங்குவதற்கு அதற்குரிய சுதந்திரமும், வளங்களும் வழங்கப்பட வேண்டும்.
அதேவேளை வட, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அரசினால் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின்மீது சற்றும் நம்பிக்கை இருக்கவில்லை.
சர்வதேச நீதியைப் பெற்றுக்கொள்ளல்
அவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவியபோதிலும், எம்மால் இயலுமானளவுக்கு நாம் பல்வேறு விடயங்களைச் செய்தோம். இவ்விவகாரத்துக்கு சர்வதேசத்தின் ஊடாக நீதியைப் பெற்றுக்கொள்வது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதொரு விடயமாகும்.
எனவே நாம் உள்ளகப்பொறிமுறையை மேலும் பலப்படுத்தவேண்டும். அதுமாத்திரமன்றி இவ்வாறான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் உண்மையிலேயே இடம்பெற்றனவா என்ற கேள்வி தெற்கில் வாழும் பலருக்கு உண்டு.
எனவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றன என்ற உண்மையை நாம் எவ்வாறு தெற்கு மக்களுக்குப் புரியவைக்கப்போகிறோம் என்பது பற்றிச் சிந்திப்பதுடன் இவ்விடயத்தில் வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் நிலவும் இடைவெளியை எவ்வாறு சீரமைக்கப்போகிறோம் என்பது பற்றிச் சிந்திக்கவேண்டும்.
மேலும் இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் இடம்பெற்றன என்ற உண்மையை அரசும், அரசு சாராத சகல தரப்புக்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும். அதுமாத்திரமன்றி இவ்விடயம் சார்ந்து அரச கட்டமைப்பை எவ்வாறு மாற்றியமைக்கவேண்டும் எனக் கலந்துரையாடவேண்டும்“ என வலியுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
