ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பொது அதிகாரிகள் : வெளியான அறிவிப்பு
COPE மற்றும் COPA ஆகிய இரண்டு நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுக்களால் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பொது அதிகாரிகள், தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி குறித்த குற்றச்சாட்டுக்கள் சட்டமா அதிபரைத் தவிர்த்து, நேரடியாக காவல்துறை அல்லது கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்துக்குப் பரிந்துரைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், இது தொடர்பில் நிலையியற் கட்டளைகளைத் திருத்துவதற்கான பிரேரணை கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது, பின்னர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கணக்காய்வாளர் நாயகம்
தேசிய கணக்காய்வு சட்டத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட திருத்தத்தின் பின்னணியில், பொதுத்துறையில் ஊழலைத் தடுப்பதற்கான சட்டங்கள் கடுமையாக்கப்படுகின்றன.
இது கணக்காய்வின் போது கண்டறியப்பட்ட மோசடி, ஊழல் அல்லது முறைகேடு வழக்குகளில் கணக்காய்வாளர் நாயகம், நேரடியாக காவல்துறைக்கு முறைப்பாடுகளை அனுப்ப அதிகாரம் அளிக்கிறது.
நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட அதிகாரிகள் அல்லது நிறுவனங்கள் மீது மேலதிக கட்டணம் விதிக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
