கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!
புதிய இணைப்பு
சீரற்ற வானிலை காரணமாக இன்று (04) மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (05) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக நிலவும் மழை மற்றும் பாதகமான வானிலை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
தற்போதைய நிலைமையை மீளாய்வு செய்ததன் பின்னர், பாடசாலை நடவடிக்கைகளை நாளை முதல் வழமைபோல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மாணவர்கள் மற்றும் பெற்றோர் வானிலை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து அவதானிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இன்றும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை மூடப்படவுள்ளதாக கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கண்டிமாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை நிலையை கருத்தில் கொண்டு மாவட்டத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
அதேவேளை, நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று மூடப்படவுள்ளதாக நுவரெலியா கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
விடுமுறை
இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, ஹட்டன், வலப்பனை, கொத்தமலை மற்றும் ஹகுரங்கெத்த ஆகிய வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகள் அனைத்திற்கும் நாளைய தினமும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலைகளை மீண்டும் திறக்கும் திகதி மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்கள் பின்னர் உரிய அதிகாரிகளால் அறிவிக்கப்படும் என்றும் கல்விப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயர் தரப் பரீட்சை
நிலவும் சீற்றமான வானிலைக்கு மத்தியில், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை என்பன தொடர்பாக நாளை (05) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையே குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
மேலும் நிலவும் மழைக்கால வானிலையுடன் பரீட்சைப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்த்துள்ளார்.
You may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |