அரசாங்கத்திற்கு எதிரான நாசவேலைகள்: எச்சரிக்கும் அநுர தரப்பு
இலங்கையின் சுற்றுலாத் துறையை குறிவைத்து பல்வேறு போலி செய்திகள் மூலம் அரசாங்கத்தை நாசப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலாத்துறை பிரிதி அமைச்சர் ருவான் ரணசிங்க (Ruwan Ranasinghe) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (25) கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரணசிங்க, வெலிகம மற்றும் அறுகம் குடா பகுதிகள் சம்பந்தப்பட்ட இரண்டு சம்பவங்கள் மூலம் அது தெளிவாகிறதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “முதல் சம்பவம் வெலிகமவில் பிலிப்பைன்ஸ் நாட்டவர் ஒருவர் தாக்கப்படும் காணொளியாகும். இந்த சம்பவம் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்றது என கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டாவது சம்பவம் அறுகம் குடா பகுதியில் பொது இடங்களில் சுற்றுலாப் பயணிகள் ”பிகினி” அணிவதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் அப்பகுதியில் இன பதற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி என கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை உட்பட முக்கிய உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க முஸ்லிம் சமூகத்துடன் அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வரும் நேரத்தில், அறுகம் குடா தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இது தொடர்பாக நாங்கள் அறுகம் குடாவிலுள்ள முஸ்லிம் சமூகத்தினரிடம் விசாரணை செய்தோம். பொது இடத்தில் நிர்வாணமாக ஒருவர் நடந்து சென்றதாகவும், அதற்கு அவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தனர்.
அரசாங்கம் தனது அதிகாரத்தை வலுப்படுத்த செயற்பட்டு வரும் வேளையில், அப்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சில நபர்கள் அல்லது குழுவினரால் மறைமுக நோக்கத்துடன் செயற்படுத்தப்பட்ட விடயமாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்.
இனங்களுக்கிடையில் பதற்றங்களை ஏற்படுத்தவும், தேசத்தை அபிவிருத்தி செய்வதற்கான அதன் முயற்சிகளை சீர்குலைக்கவும் சிலர் மேற்கொண்ட முயற்சிகளாகவே அரசாங்கம் இந்தச் சம்பவங்களைக் கருதுகிறது.
சுற்றுலாத் துறையை இலக்கு வைத்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கோ அல்லது குழுவிற்கோ எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபோன்ற போலி செய்திகளுக்கு பலியாக வேண்டாம் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
