புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ள அரசாங்கம் : மனுஷ நாணயக்கார தெரிவிப்பு
இலங்கை மக்கள் எதிர்பார்க்கும் அமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் ஆயத்தமாக இருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் கூறியுள்ளார்.
இலங்கை கடந்த காலங்களில் எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள தற்போது பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன்படி, வரலாற்றில் அதிகளவிலான சட்ட விதிமுறைகளை நிறைவேற்றும் காலமாக இக்கால கட்டத்தைக் குறிப்பிடலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டம்
இலங்கையில் அமைப்பு ரீதியான மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டுமென கடந்த காலங்களில் அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கோரியதாக அவர் நினைவூட்டியுள்ளார்.
குறித்த மாற்றத்தைக் மேற்கொள்வதற்காக, தற்போதைய காலத்துக்கு ஏற்ற சட்டங்களை அறிமுகப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக மனுஷ நாணயக்கார கூறியுள்ளார்.
அத்துடன், அரசாங்கம் மாறும் போது மற்றும் ஆளும் கட்சிகள் மாறும் போது மாற்றமடையாத நிலையான கொள்கைகளைத் தயாரிக்கும் பணிகளும் தற்போது இடம் பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

துறை ரீதியான மாற்றங்கள்
இதேவேளை, இலங்கையில் ஐந்தாண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கொள்கை இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு அனைத்துத் துறைகளுக்குமான கொள்கைகள் தயரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த தற்போதைய சிறிலங்கா அரசாங்கம் முயற்சித்து வருவதாக மனுஷ நாணயக்கார மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.