80 அரச நிறுவனங்களில் அதிரடி மாற்றம்: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
நாட்டில் 80 இற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களை (State Enterprises) விசேடமாக மறுசீரமைத்து தனியார் துறைக்கு நிகரான திறனுடன் இயக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் மூலோபாய நகர்வின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இதனடிப்படையில், அரச-தனியார் கூட்டுப் பங்களிப்புகளை (PPP) விரிவுபடுத்துதல், அரச நிறுவனங்களின் நிர்வாகத்தை மேம்படுத்துதல், சுங்க விதிமுறைகளைப் புதுப்பித்தல் மற்றும் தொழிலாளர் சட்டங்களைத் திருத்துதல் உள்ளிட்ட முக்கிய சட்டமூலங்களை 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை
அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே இணைந்த செயல்பாடுகளுக்கான சட்டக் கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட புதிய அரச நிறுவனங்கள் நிர்வாகச் சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களில் அரசியல் தலையீடுகளைக் குறைத்து தொழில்முறை மற்றும் சுயாதீன நிர்வாக நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

நீண்டகாலமாக நஷ்டத்தில் இயங்கி வரும் அரச நிறுவனங்களைப் பராமரிப்பதற்காக வரி செலுத்தும் பொதுமக்கள் மீது சுமத்தப்படும் பாரிய நிதியியல் சுமையைக் குறைக்க இச் சட்டமூலம் வழிவகுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில் 1869 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள பழமையான சுங்க விதிமுறைகளை முற்றாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் இறக்குமதி
இதன் மூலம் நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்முறைகளை அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய வெளிப்படையான மற்றும் திறமையான அமைப்பாக மாற்ற இலக்கிடப்பட்டுள்ளது.
தற்போது பல்வேறு சட்டங்களின் கீழ் சிதறடிக்கப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை, நவீன உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப ஒரே சீரான சட்டக் கட்டமைப்பாக ஒருங்கிணைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இச் சீர்திருத்தம் உள்நாட்டு வேலைவாய்ப்பு சந்தையின் நெகிழ்வுத்தன்மையையும் கவர்ச்சியையும் கணிசமாக உயர்த்தும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனடிப்படையில் இலங்கையில் பெருமளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களின் வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தனியார் முதலீடுகளைத் தீவிரமாக ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு புதிய PPP சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |