பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் : கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு
பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கான பாடசாலை விருப்பத்தேர்வுகளைச் சமர்ப்பிக்கும் இணையவழி முறைமை இன்று (17) முதல் செயற்பாட்டுக்கு வருவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1 (அ) வகுப்பிற்கு நியமிக்கப்படும் பட்டதாரிகளுக்காக இந்த முறைமை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தவகையில், விண்ணப்பதாரர்கள் கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஊடாக “ஆசிரியர் நியமன விண்ணப்ப முறைமை” (Teacher Recruitment Application System) பகுதிக்குச் சென்று, தங்களுக்கு விருப்பமான பாடசாலைகளைத் தெரிவு செய்து சமர்ப்பிக்கலாம்.
தேசிய அடையாள அட்டை எண்
இதற்குள் நுழைவதற்கு, விண்ணப்பதாரர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை எண் அல்லது பரீட்சை சுட்டெண் ஆகியவற்றுடன், நேர்காணலுக்கான அழைப்புக் கடிதத்துடன் வழங்கப்பட்ட ஒருமுறை கடவுச்சொல்லையும் (OTP) உள்ளிட வேண்டும்.
இதுவரை தபால் மூலம் அழைப்புக் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்கள், கடிதத்தைப் பெறும் வரை இந்த இணையத்தள முறைமையைப் பயன்படுத்த முடியாது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், நேர்காணல் அழைப்புக் கடிதங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் அச்சப்படத் தேவையில்லை என்றும், ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஒதுக்கப்பட்ட நேர்காணல் திகதி வரை இந்த இணையத்தள முறைமை செயற்பாட்டில் இருக்கும் என்றும் அமைச்சு உறுதி அளித்துள்ளது.
நேர்காணல் திகதி வரை கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்களுக்கு, நேர்காணல் நடைபெறும் நாளிலேயே தங்கள் பாடசாலை விருப்பத்தேர்வுகளைச் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |