வவுனியாவில் பெண் ஒருவர் மீது கூட்டு பாலியல்: நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!
10 வருட சிறை
பெண் ஒருவரை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனே இவ்வாறு குற்றவாளிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் வழக்கின் குற்றவாளிகளுக்கு தலா 05 இலட்சம் ரூபா நட்ட ஈடு விதித்தும் நட்ட ஈட்டை செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலும் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, இரண்டு குற்றவாளிகளுக்கும் 5000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ள குற்றச்சாட்டு
நெளுக்குளத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி முச்சக்கரவண்டியில் பெண் ஒருவரை ஏற்றிச்சென்ற இருவர் அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு நியாயமான காரணிகளை அரச தரப்பு சட்டத்தரணி மன்றில் முன்னிலைப்படுத்தி, குற்றச்சாட்டை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளார்.
அதற்கமைய, இரண்டு பிரதிவாதிகளையும் குற்றவாளிகள் என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உறுதி செய்தார்.
இரண்டு குற்றவாளிகளில் ஒருவர் மாத்திரமே இன்று மன்றில் முன்னிலையாகியிருந்ததுடன்,
அவருக்கான தண்டனை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
மற்றைய குற்றவாளி இந்தியாவில் தலைமறைவாகியுள்ளதால், அவரை கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணை உத்தரவை பிறப்பித்து,
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று உத்தரவிட்டுள்ளார்.