பலரின் கூட்டு முயற்சியால் வளர்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரம்: வியாழேந்திரன் சுட்டிக்காட்டு
இலங்கையின் அரசாங்கமும், அதிபரும் இன்னும் பலரும் கூட்டாக எடுத்துக் கொண்ட கடின உழைப்பால் தற்போது நாடு படிப்படியாக பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளர்ந்து வருகின்றது. என வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் (S.Viyalendiran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு (batticaloa) மாவட்டத்தில் நேற்று (05.05.2024) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பொருளாதார நிலைமை
“நாடு மோசமான பொருளாதார சூழ்நிலையில் இருந்ததை அனைவரும் அறிவார்கள். எரிபொருட்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் வரிசையில் நிற்கவேண்டிய சூழ்நிலை இருந்தது.
பணமிருந்தும் பொருட்கள் இல்லை என்ற நிலமை இருந்தது. இதனால் பலர் நாட்டையே விட்டு வெளியேறினார்கள். இதனால் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிக்குள்ளேயே எமது நாடு சென்றிருந்தது.
அரசாங்கமும், அதிபரும் இன்னும் பலரும் கூட்டாக எடுத்துக் கொண்ட கடின உழைப்பால் தற்போது நாடு படிப்படியாக பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளர்ந்து வருகின்றது.
பணவீக்கம்
இவ்வாறு பொருளாதார வீழ்சசியைச் சந்தித்த பல நாடுகள், 50 வருட காலமாகவும் உலகத்தில் எழவில்லை. ஐரோப்பிய நாடுகளில் கூட விலைவாசிகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் கூட கொரோனா தொற்றுக்குப் பின்னர் பணவீக்கம் பாரிய பிரச்சனையாகும். தற்போது 400 ரூபாவாக இருந்த டொலர் 298 ரூபாவிற்கும், 460 ரூபாவாக இருந்த யூரோ
316 ரூபாவாகவும் குறைந்துள்ளது.
எனவே படிப்படியாக நாடு வளர்ச்சி கண்டு வருகின்றது. இருந்தாலும் மக்களின் வாழ்க்கைச்சுமை குறையவில்லை இது பெரிய கவலையான விடயமாகும். இது குறையவேண்டும் அதைத்தான் அரசாங்கமும், அதிபரும் விரும்புகின்றனர்.
பொருட்களின் விலை
அதற்காக பொருட்களின் விலை வெகுவிரைவில் குறைக்கப்படல் வேண்டும். விலைவாசியைக் குறைப்பதற்காக உற்பத்தி திட்டங்களை இந்த வருடத்திற்குரிய வரவு செலவுத்திட்டத்தில், நிதியை ஒதுக்கீடு செய்வதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் வேகமாக முன்னெடுக்கின்றது.
அதேபோன்று காணி உறுதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு காணி வழங்குவதும், உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான, முக்கிய வேலைத்திட்டத்தை அரசு முன்னெடுத்து வருகின்றது.
எனினும் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக மேம்படுத்த வேண்டும் என்பதுதான் எமது அனைவரினதும் ஒட்டுமொத்தமான நோக்கமாகும். அதற்காக நாம் தொடர்ச்சியான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம்.“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |