அனுர அரசின் அழைப்பை நிராகரித்த வளைகுடா விமான நிறுவனங்கள்
தற்போதைய போர்ச்சூழலை அடுத்து மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்துமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு, முன்னணி வளைகுடா விமான நிறுவனங்கள் பதிலளிக்கவில்லை என சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்துமாறு, வளைகுடா விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம், அறிவுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தப் பதிலும் வரவில்லை
விமான நிலையத்தைப் பயன்படுத்துமாறு நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்துள்ளோம், ஆனால் இதுவரை யாரும் அவ்வாறு செய்ய விருப்பம் தெரிவிக்கவில்லை.

தற்போது அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்துமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் நாங்கள் தெரிவித்துள்ளோம். இருப்பினும், அவர்கள் தரப்பிலிருந்து எந்தப் பதிலோ அல்லது ஆர்வமோ இல்லை.
அவர்களின் செயற்பாட்டையும் இங்கு மாற்றுவதற்கான திறன் இல்லாததே இதற்குக் காரணம். அவை பெரிய விமான நிறுவனங்கள், எனவே, அவர்களால் எளிதாக மத்தலவிற்கு மாறுவது சாத்தியமற்றது.
இலவச தரையிறக்கம் மற்றும் நிறுத்துமிட வசதி
மத்தல சுமார் 1 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட ஒரு விமான நிலையம். அனைத்து விமான நிறுவனங்களுக்கும் எரிபொருள் நிரப்புதல் மற்றும் இடைவழிப் பயணம் தேவைப்பட்டால், இலங்கை இலவசமாகத் தரையிறக்கம் மற்றும் நிறுத்துமிட வசதிகளை வழங்கத் தயாராக உள்ளது.

ஆயினும், நாங்கள் அனுப்பிய அழைப்புகளுக்கு எந்தப் பதிலும் வரவில்லை; அவர்கள் பாராட்டுக்களை மட்டுமே தெரிவித்துள்ளனர், அவ்வளவுதான். கலந்துரையாடல்களுக்காக வளைகுடா பிரதிநிதிகள் குழு வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான போதும் அது தவறானது என்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடிதுவக்கு மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |