வவுனியா அரசாங்க அதிபர் நியமனம் குறித்து அரசுக்கு அழுத்தம்...!
வன்னியைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவை அதிசிறப்பு அலுவலர் குணபாலனை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க வன்னித் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
போர்க்கால பாதிப்புற்று இருந்த வன்னி மாவட்டத்தில் இருந்து இலங்கை நிர்வாக சேவை (SLAS) பரீட்சையில் தோற்றிச் சித்தியடைந்து 20 வருடங்களுக்கு மேல் தனது பணியை நேர்மையாகவும் சிறப்பாகவும் மேற்கொண்ட குணபாலனை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க வேண்டும் என்ற கருத்தியல் வன்னி சமூக அமைப்புகளிடையே வலுப்பெற்றது.
இதன் பின்னணியில் வன்னித் தேர்தல் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் கரிசனைக்கு மக்களால் இவ்விடயம் கொண்டு செல்லப்பட்டது.
மக்களின் கோரிக்கை
வாக்களித்த வன்னி மக்களின் கோரிக்கையைக் கட்சி பேதமின்றி அனைத்து வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்து தமது தேர்தல் மாவட்டத்தைச் சேர்ந்த நேர்மையான வினைத்திறனான தகுதியான இலங்கை நிர்வாக சேவை அதிகாரி குணபாலனை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்க ஜனாதிபதி மற்றும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியோருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்கள்.
இந்த விடயத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோரின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றுள்ளது.

அத்தோடு சமயப் பெரியவர்களும் அரசியல் தலைவர்களுக்கு அறிவுறுத்தி வருகிறார்கள்.
அந்தப் பிரதேச மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு, அந்த மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உண்டு.
அந்த வகையில் அனைவரினதும் கூட்டு முயற்சியால் இலங்கை நிர்வாக சேவை அதிசிறப்பு அலுவலர் தனது மண்ணில் அரசாங்க அதிபராகப் பதவியேற்பார் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |