பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு : விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் வெள்ள நிலைமைகள் காரணமாக ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் தொடர்பான நட்டஈட்டை வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்த விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டாயக் காப்பீட்டின் கீழ் உள்ள பயிர்களான நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மிளகாய் மற்றும் சோயா அவரை ஆகிய பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்து நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலைமையின் கீழ் மேற்கூறிய பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து தெளிவான புரிதலைப் பெற முடியாததால், வெள்ளம் வடிந்தவுடன் விவசாய சேவை நிலையங்களில் உள்ள சேத அறிக்கை புத்தகங்களில் ஏற்பட்ட சேதத்தைப் பதிவு செய்யுமாறு அல்லது விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் அதிகாரியை அறிவுறுத்துமாறும் அந்த சபை விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசர அழைப்பு இலக்கம் அறிமுகம்
மேலும், ஏனைய பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாகவும், பயிர் அமைந்துள்ள இடத்திற்குரிய விவசாய சேவை நிலையத்தில் பேணப்படும் சேத அறிக்கை புத்தகங்களில் பதிவு செய்ய வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் சேதம் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் பிரச்சினைகளுக்கான ஆலோசனைகளுக்காக விவசாய காப்பீட்டு சபையின் அவசர அழைப்பு இலக்கமான 1928 மூலமாகவும் விவசாயிகளுக்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சேதங்களுக்கான நட்டஈட்டை விவசாய அபிவிருத்தித் திணைக்களமும் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையும் இணைந்து வழங்கும் என்றும் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபை தமது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |