விவசாயிகளுக்கு 25,000 ரூபாய் உர மானியம் : வெளியான மகிழ்ச்சித் தகவல்
உர மானியம் கிடைக்காமைக்கோ அல்லது தாமதமாவதற்கோ எவ்வித காரணமும் இல்லை எனவும் உர மானியத்தை வழங்குவதற்குத் தேவையான போதுமான நிதி கமநல அபிவிருத்தி திணைக்களத்திடம் உள்ளதாகவும் கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தம்மிக்க ரணதுங்க (Dhammika Ranatunga) தெரிவித்துள்ளார்.
பெரும்போகத்திற்கான உர மானியத் திட்டம் கடந்த 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகவும், இதன் கீழ் நெல் பயிரிடும் விவசாயிக்கு 25,000 ரூபாய் நிதி மானியம் வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இந்த மானியம் இரண்டு தவணைகளாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
நெற் செய்கை ஆரம்பித்தல்
போக கூட்டம் நடத்தப்பட்டு, விவசாயிகளின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்பட்டு கமநல சேவை நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டவுடன், முதலாம் தவணையாக 15,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இரண்டாவது தவணையாக உள்ள மீதி 10,000 ரூபாய் நெற் செய்கை வயலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் 14 இலட்சம் விவசாயிகளுக்கும் அதாவது சுமார் 8 இலட்சம் ஹெக்டேயர் நெற் காணிகளுக்கும் இந்த மானியத் திட்டத்தின் கீழ் உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்காக அரசாங்கத்தினால் 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் உர மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 211,974 விவசாயிகளுக்கு 1976 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |