கடற்படை முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா! நீதிமன்றில் அறிக்கை
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன குறித்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்த வழக்கில் சந்தேகநபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஹரக் கட்டாவும் கருத்துக்களை முன்வைக்க சந்தரப்பம் வழங்கப்பட்டுள்ளது.
முழங்கால் பாதிப்பு
இந்த வழக்கிற்காக பிரதிவாதியான ஹரக் கட்டா ‘சூம்’ தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

அவர் தொலைக்காட்சித் திரை ஊடாக கையை உயர்த்தி, தாம் எதிர்நோக்கும் நிலைமை குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டார்.
தமக்கு பொருத்தமான சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், தற்போது தாம் கடற்படை முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தனது முழங்கால் பாதிப்புக்காக ஆயுர்வேத சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், தற்போது அந்தச் சிகிச்சை கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்
இதன்போது ஹரக் கட்டா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாலிய சமரசிங்க, தமது சேவை பெறுநரை பொருத்தமான சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், அவர் தற்போது கடற்படை அதிகாரிகளின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று (ஆகஸ்ட் 20) கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது அரசுத் தரப்பு சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, நீதிமன்றம் முன்னர் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening