முஸ்லிம்களை சீண்டும் சூழ்ச்சிகள் இன்னும் ஓயவில்லை - வெளிவந்தது காட்டமான அறிக்கை
முஸ்லிம் சமூகத்தின் மீது அநியாயமாக அரங்கேற்றப்படும் இன, மத குரோதச் செயற்பாடுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறன என கிண்ணியா நகர சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம். மஹ்தி கவலை வெளியிட்டுள்ளார்.
அவர் இன்று(02) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பல்லின சமூகம் வாழும் இந் நாட்டில் இன, மத குரோதங்களால் முஸ்லிம்களை சீண்டுகின்ற வங்குரோத்து அரசியல் செயற்பாடுகள் அரங்கேற்றப் படுகின்றமை குறித்து பௌத்த பெரும்பான்மை மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் முஸ்லிம்களின் வணக்கத்துக்குரிய இறைவனை குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரி எனக் கூறியமை, ஒவ்வொரு முஸ்லிமும் ஐ.எஸ்.ஐ.எஸ் சிந்தனையை கொண்டவர்கள், முஸ்லிம்கள் இறைவனுக்கு அடுத்ததாக தன்னையே வணங்குகிறார்கள் என அமைச்சர் சரத் வீரசேகர கூறியமை எல்லாம் உலக வாழ் முஸ்லிம்களை வெகுவாக வேதணைக்கு உள்ளாக்கி இருக்கின்றன.
இக்கருத்துக்கள் யாவும் இஸ்லாமிய கடவுள் கோட்பாட்டுகளை மோசமாக கேலி செய்வதோடு அவர்களின் உள்ளங்களையும், உணர்வுகளையும் நோவினை படுத்துகின்ற மத நிந்தனை கொண்ட வெறுக்கத்தக்க செயற்பாடுகளும் ஆகும்.
அரசியல் இலாபங்களுக்காக பொறுப்பு வாய்ந்தவர்களால் தெரிவிக்கப்படும் இவ்வாறான கருத்துகள், இன முரண்பாடுகளையும் கலவரங்களையும் ஊக்கப்படுத்துமே தவிர இந்த நாட்டையோ அல்லது நாட்டின் பொருளாதாரத்தையோ ஒருபோதும் அபிவிருத்தி செய்யப் போவதில்லை” என்றுள்ளது.