சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஹரீஸ் எம்.பி
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) பிரதித் தலைவர் பதவியில் இருந்தும், உச்ச பீட உறுப்புரிமையிலிருந்தும் அந்தக் கட்சியின் அம்பாறை (Ampara) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் (H. M. M. Harees) இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஆதரித்து வெற்றி பெறுவதற்கு பிரசாரம் செய்ய கட்சி மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமையச் செயற்படத் தவறியமைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பள்ளது
அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுடைய (Rauff Hakeem) அறிவுறுத்தலுக்கு அமைவாக, கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர் (Nisham Kariyappar) ஹரீஸுக்கு, இது தொடர்பில் இன்று (20) கடிதமொன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.
சஜித்திற்கு ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ள நிலையில், சஜித்தின் வெற்றிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் உழைக்க வேண்டுமென கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவுறுத்தியிருந்தார்.
இருந்தபோதும், இதுவரையில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நடத்தப்பட்ட எந்தவொரு கூட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கலந்து கொள்ளவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அம்பாறை மாவட்டத்தின் மற்றைய நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் (Cassim Faizal) , திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் (M. S. Thowfeek) ஆகியோர் கட்சித் தலைவருடன் இணைந்து, சஜித் பிரேதமாசவை ஆதரித்து நடத்தப்பட்ட கூட்டங்களில் கலந்து கொண்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இடைநிறுத்தப்பட்ட அலிசாஹிர் மௌலானா
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா (Ali Zahir Moulana) ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) தனது ஆதரவை அறிவித்தமையினால், கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், அரசாங்கத்திடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், 860 மில்லியன் ரூபாவை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |