சம்பந்தனின் உணர்ச்சிகரமான கருத்திற்கு கடும் விமர்சனம்
இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்காவிடின் சர்வதேசத்துடன் இணைந்து தீர்வைப் பெற்றுக்கொள்ள களமிறங்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக விமர்சித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது அலரி மாளிகையில் இடம்பெற்ற தேசிய தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்ற இரா.சம்பந்தன், அடுத்த தீபாவளிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் எனக் கூறி, இன்றுடன் ஏழு ஆண்டுகள் கடந்துள்ளன.
எனினும் அன்று பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க இன்று நிறைவேற்று அதிகாரத்தில் இருக்கின்ற போதிலும் இன்றுவரை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவது தொடர்பாக எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமை தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உணர்ச்சிகரமான கருத்து
இந்த நிலையில், இலங்கையில் தமிழர்களின் இனப் பிரச்சினைக்கு சிறிலங்கா அரசாங்கம் விரைந்து தீர்வை வழங்காத பட்சத்தில் சர்வதேச உதவியுடன் அதனை வென்றெடுக்க களமிறங்குவோம் எனவும் அரசியல் தீர்வு தொடர்பாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் நம்பிக்கைக்குரியனவாக இல்லை எனவும் சம்பந்தன் இந்த வருட தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அடுத்த தீபாவளிக்கு முன்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுத் தருவதாகக் கடந்த 2016 ஆம் ஆண்டு இரா.சம்பந்தன் வழங்கிய உறுதிமொழி தொடர்பாகவும் - இவ்வருடம் முன்வைத்துள்ள உணர்ச்சிகரமான கருத்து தொடர்பிலும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலரும், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.