எரிபொருள் பற்றாக்குறை: இருளில் மூழ்கும் ஹட்டன் தொடருந்து நிலையம்!
ஹட்டன் தொடருந்து நிலையம் இரவுகளில் இன்றும் இருளில் மூழ்கிக்கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணமாக, நிலையத்தில் நிறுவப்பட்டிருக்கும் ஜெனரேட்டருக்கு தேவையான எரிபொருள் வழங்கப்படாமை என கூறப்படுகிறது.
மோசமான காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக மின் வழங்கல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது என நிலைய மேலாளர் ஜனக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நிலையத்தில் பெரிய ஜெனரேட்டர் இருக்கின்றபோதிலும், அதனை இயக்க தேவையான எரிபொருள் இல்லாததால் பயன்பாட்டுக்கு வரவில்லை.
பயணிகளுக்கு அசௌகரியம்
இரவு நேரத்தில் பயணிக்கும் பயணிகளிடமிருந்து முறைப்பாடுகள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றன எனவும், மின்வெட்டு நேரங்களில் நிலையம் முழுவதும் இருட்டாக இருப்பது பயணிகளுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தொடருந்து பொறியியல் பிரிவினால், ஜெனரேட்டரில் எரிபொருள் அளவு 20% ஆகவோ அதற்கு மேற்பட்டதாகவோ இருந்தால்தான் அதனை இயக்க வேண்டும் என உத்தரவு விடுக்கப்பட்டுள்ளதால் தற்போது எரிபொருள் அளவு 17% மட்டுமே உள்ளதால், அதனை இயல்புநிலையிலேயே இயக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
ஜெனரேட்டருக்காக 50 லீற்றர்
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் ஜெனரேட்டருக்காக 50 லீற்றர் டீசலை வழங்குமாறு தொடருந்து திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லையெனவும் நிலைய மேலாளர் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட 50 லீற்றர் டீசல் ஐந்துநாள் மாதங்கள் வரை ஜெனரேட்டரை இயக்குவதற்கு போதுமானதாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
