சுகாதார அமைச்சர் எடுத்துள்ள முக்கிய முடிவு : நிறுவனத்தலைவர்களை மாற்ற தீர்மானம்
சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக சுகாதார அமைச்சரால் புதிய தீர்மானம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.
தரம் குறைந்த மருந்துகளை கொள்முதல் செய்தல், ஒப்பந்த நடைமுறைகளில் விதிமீறல்களில் ஈடுபடுதல் என்பவற்றுக்கு காரணமானவர்களை பதவியில் இருந்து நீக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் நேற்று (29) தெரிவித்துள்ளார்.
அதன்படி, சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் தலைவர்களையும் மாற்றுவதற்கு புதிய சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய மாற்றங்கள்
முதலில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (என்எம்ஆர்ஏ) இயக்குநர் குழு கலைக்கப்பட்டு புதிய தலைவர் மற்றும் இயக்குநர்கள் குழு நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அரச மருந்துக் கூட்டுத்தாபனத்திற்கும் புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் சில உயர் பதவிகள் மாற்றப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் புதிய சுகாதார அமைச்சராக டொக்டர் ரமேஷ் பத்திரன அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் புதிய மாற்றங்களை அவர் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளார்.
மேலும், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிருப்தியில் உள்ள நிலையில் புதிய சுகாதார அமைச்சர் புதிய மாற்றங்களை நடைமுறைப்படுத்துவது அவர்களை மேலும் அதிருப்தியடையச் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
YOU MAY LIKE THIS